இன்று நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில், விஜய் முதன்முறையாக தமிழக அரசியலின் முக்கிய முன்னணி தலைவர்களான ஸ்டாலின் மற்றும் மோடி பெயர்களை நேரடியாக எடுத்து அனல் பறக்கும் விதமாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “தமிழ்நாடு மிகச் சுவாரஸ்யமான சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் முக்கியமான போட்டி திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் மட்டுமே நிலவுகிறது.”

விஜய், இன்னும் அரசியலில் புதிதாக வந்தவர்களும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கனவு காண்கின்றனர் என்ற கருத்தை சாடும் போது, “நேற்று அரசியலில் நுழைந்தவர்கள் கூட முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார்கள். அப்படி என்றால், ஏன் அந்த அழுத்தம் என் மீதும், என் கட்சியின் மீதும் மட்டும்?” என்றார்.
அதைத் தொடர்ந்து, “அணை கட்டி ஆற்றைத் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. தடுக்க முயன்றால், சாதாரண காற்று சூறாவளியாக மாறும், மேலும் சக்திவாய்ந்த புயலாகவே உருவெடுக்கும்,” என்று அவர் விளக்கினார்.
திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை குறிக்கும் போது, “பெயரை மட்டும் வீரமாகச் சொல்லிவிட்டால் போதாது; ஆட்சியிலும் அதை நிரூபிக்க வேண்டும்,” என்று விஜய் கூறினார். மேலும், “மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் ஆட்சியை உருவாக்க உறுதியாக இருக்கிறோம். காற்றையும் மழையையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதுபோலத்தான் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,” என அவர் தெரிவித்தார்.
விஜய், தங்களின் ஆட்சியினை மக்கள் நலன் அடிப்படையில் அமைப்பதற்கும், அந்த ஆட்சியில் அனைத்து மக்களுக்கு சமத்துவம் கொண்டு செல்வதற்கும் உறுதி தெரிவித்தார். “நாங்கள் அமைக்கவிருக்கும் அரசு அதிகாரப் பகிர்வுடன் இயங்கும். ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100% உறுதி செய்ய முடிவெடுக்கிறோம். சட்டம்-ஒழுங்கு உறுதியானதாக இருக்கும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமத்துவ வளர்ச்சி எங்கள் இலக்கு,” என்றார்.
மேலும், அவர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைப்பாளர்களின் பக்கம் உறுதியாக நிற்போம் என்றார். “தமிழகம் விவசாய நிலம். விவசாயத்திற்கு எதிரான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நலனை பாதுகாக்க நாங்கள் எப்போதும் தயார்,” என ஆவேசமாக விஜய் பேசினார்.