சென்னை அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு. விஜயை பாஜக தான் இயக்குகிறது என்றும், டெல்லியில் இருந்து கிடைக்கும் பின்புலத்தின் தைரியத்தால்தான் அவர் பேசும் வார்த்தைகளில் அகந்தை தெரிகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் தெளிவாகவே தற்போதைய ஆட்சி தொடரும் என்று நம்புகிறார்கள் என்றார். ஆனால் சிலர் பாஜக ஆதரவோடு கட்சிகளை உருவாக்கி, ஆட்சிக்கு சவாலாக நிற்க முயற்சி செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலோடு தான் தவெக கட்சி தொடங்கப்பட்டது என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு, தனி விமானம் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கியிருப்பது அதற்கு ஆதாரம் என அப்பாவு கூறினார். “சினிமாவில் பேசி வந்த பழக்கத்தை அரசியலிலும் பயன்படுத்துவது மக்களுக்கு பிடிக்காது. முதல்வர், பிரதமர் போன்றவர்களை மதிப்புடன் அழைக்க வேண்டும். கண்ணியமில்லாத வார்த்தைகள் சிறுவயது போக்கு போல தெரிகிறது” என்று அவர் விமர்சித்தார்.
அதோடு, தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காமல், மத்திய அரசு அநீதி செய்கிறது என்றும் சபாநாயகர் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவுக்கு மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றாலும் நிதி வழங்கிய நிலையில், தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேறுவதை தடுக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசு செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.