சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் கட்சி இயக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஜூலை மாதம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர் கருத்தரங்குகள் நடைபெறும் என்றும், ஆகஸ்டில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் மக்கள் சந்திப்பு தேர்தல் பயணம் மேற்கொள்ள உள்ளார். 12,500 கிராமங்களில் பொது கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்கும், 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்குடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு ஒருவர் தவெகவில் சேர வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் 2 பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கே அளிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலைய திட்டம் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவை எனக் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை தவெக எதிர்க்கும் என்றும், இருமொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல்மா சிப்காட் திட்டம், மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 1,200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.