மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசிய போது, “2006ல் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் நுழைந்தாரோ, அதேபோல் 2026ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் நுழைவார்” என்று உறுதியளித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மாநிலம் முழுவதும் 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதே நேரத்தில், தேமுதிக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடனும் நெருக்கம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கூட்டணி கணிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

விஜய பிரபாகரன் தனது உரையில், “தந்தை விஜயகாந்தின் லட்சியத்திற்காக 200 சதவிகிதம் உழைக்கத் தயாராக உள்ளேன். சுயமாக உருவான இந்தக் கட்சியை யாராலும் அசைக்க முடியாது. இனி மக்கள், விஜயகாந்தையும் பிரேமலதாவையும் பார்த்ததுபோல, விஜய பிரபாகரனையும் காண்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், “2026ல் முரசு நிச்சயமாக வெற்றிபெறும். ஆட்சி அமைக்க தேமுதிக முக்கிய பங்கு வகிக்கும்” என அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தமிழக அரசியலில் தேமுதிக மீண்டும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக மாறுமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.