டெல்லி: புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், கடந்த 30-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக சேதத்தை சந்தித்துள்ளன. புயல் கரையை கடந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தீவுகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ள சேதம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில், தமிழகத்தில் வங்காள புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்.
மத்திய அரசு மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு ஒரு யூனியன் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிவிப்பை அவர் கொடுத்துள்ளார்.