தஞ்சாவூர்: 2000 பேர் வசிக்கும் கிராமத்தின் வரைபடம் காணாமல் போனதால் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை – ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அய்யா சாமி பட்டி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 2,000 குடும்பத்தினர் வசிக்கும் இப்பகுதி கிராமத்தின் வரைபடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகவும் – கிழிந்து போனதாகவும் கூறப்படுகிறது.
எனவே புதிதாக வரைபடம் வழங்க வேண்டிய அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று பத்து அமைச்சர்கள் பங்கு பெற்ற சம்பா முத்தரப்பு கூட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர்.