சென்னை: நாடாளுமன்ற தொகுதிகளை 1971 மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையிலேயே நிர்ணயிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர், திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், மக்கள்தொகையை குறைப்பது மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே செயல்படுத்தப்பட்டது. ஆனால், இன்று மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி, 2002-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1971-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளின்படி, தொகுதி மறுசீரமைப்பு அவசியம் ஏற்பட்டபோது, இதை தற்காலிகமாக தள்ளி வைக்க தனி சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாக தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையே சமமற்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு மறுசீரமைப்பை மீண்டும் தள்ளி வைத்தது.
இப்போது எந்த விதமான கடப்பாடுகளும் இல்லாத நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மாற்றினால், தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழல் உருவாகும். இதனை எதிர்த்தும் 1971 மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, மறுசீரமைப்பு விகிதாச்சார அடிப்படையில் அமையும் என்றும், தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விகிதாச்சாரம் தற்போதுள்ள நாடாளுமன்ற இடங்களை அடிப்படையாக கொண்டு உயருமா, அல்லது தற்போதைய மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு உயருமா என்பது குறித்து மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த குழப்பமான சூழலில், பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய தொகுதிகளை அடிப்படையாக கொண்டு விகிதாச்சாரம் உயரும் என்று கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது என்பது மட்டுமல்ல, உள்ள தொகுதிகள் அந்த நிலையில் நீடிக்க வேண்டும். மேலும், வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்கள் கொடுத்தாலும், தென் மாநிலங்களுக்கு எந்தவிதமான இழப்பு ஏற்படக் கூடாது. எனவே, 1971 மக்கள்தொகை கணக்கீட்டு அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வேண்டும் என்று ஆ.ராசா வலியுறுத்தினார்.