சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், மாநில பிரதிநிதிகளின் இருக்கைக்கு முன்பாக அவர்களின் பெயர்கள் அந்தந்த மாநில மொழியில் மற்றும் ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்தன. மேலும், பேசப்படும் கருத்துக்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் பஞ்சாபியில் மொழிபெயர்க்கும் கருவி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பேசிய போது, 2023ல் தெலுங்கானாவில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையை மேற்கோளிட்டார். மோடி, “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது தென்மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்கும்” என கூறியதை அவர் நினைவுபடுத்தினார். இது, தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற நியாயத்தை மோடியே ஒப்புக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களின் கழுத்திற்கு மேல்தங்கிய கத்தி போல உள்ளதென கூறினார். பாஜக, குறுகிய அரசியல் லாபத்திற்காக இதைப் பயன்படுத்த முயல்கிறது என்றும், தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறைவதால் பாஜகவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதென அவர் எச்சரித்தார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களுக்கு எதிரான தண்டனை என்றும், இதற்கெதிராக கட்சி வேறுபாடுகளை மறந்து போராடவேண்டுமென வலியுறுத்தினார்.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், மாநில உரிமைகளை பறிக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்கிறது என அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாநில உரிமைகளை காப்பதற்கான பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவது முக்கியமானது என அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பின் பெயரில் தண்டிப்பது முறையானதல்ல என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.