சென்னை: தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 27 வரை நடைபெற்றது. இதையடுத்து, 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் 296 தேர்வு மையங்களில் 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், 10ம் வகுப்பு தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், தேர்வுகள் இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், “பொது தேர்வு பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.
தேர்வு பணிக்கு வராத பள்ளி நிர்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை, பொது தேர்வு பணிக்கு அனுப்ப வேண்டும்.