உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால், நள்ளிரவு முதல் உபரி நீர் ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறந்து விடப்படுகிறது. ஏற்கனவே அணை முழு கொள்ளளவான 90 அடி நிரம்பியதையடுத்து, அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
நேற்று, டிச., 12-ல், நள்ளிரவு, 12 மணிக்கு, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்தது. உடனடியாக அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நள்ளிரவு 1 மணிக்கு வினாடிக்கு 12,000 கன அடியும், 1.30 மணிக்கு 25,000 கன அடியும், காலை 6.30 மணிக்கு 26,000 கன அடியும், காலை 7 மணிக்கு 30,000 கன அடியும், காலை 8 மணிக்கு 36,000 கன அடியும் திறக்கப்பட்டது.

அணையில் மொத்தம் 9 கதவணைகள் உள்ளன. இதில் 2 கதவுகள் பழுதால் திறக்கப்படவில்லை. மீதமுள்ள 7 கதவணைகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் ஆற்றை நோக்கி சென்றது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கஜா புயலின் போது அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் இன்று அதிகபட்சமாக வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.