சேலம்: கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.36 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவின் 124.80 அடி உயரமுள்ள கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 123.20 அடி தண்ணீர் உள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல், 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் தற்போது 18.49 டிஎம்சி நிரம்பியுள்ளது. எனவே நேற்று கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 17,375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 57,409 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 64,033 கனஅடியாகவும், மாலையில் 76,794 கனஅடியாகவும் அதிகரித்தது. இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியில் இருந்து 75.05 அடியாக உயர்ந்தது. மாலையில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து 77.36 அடியை கடந்தது. அணையின் நீர் கொள்ளளவு 31.77 டிஎம்சியில் இருந்து இன்று 39.37 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்ததால், ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்து விடவில்லை. கடந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக 18,058 கன அடி (ஜூலை 30-ம் தேதி) தண்ணீர் வரத்து இருந்தது, அதுவும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அவற்றின் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்வரத்து நீடித்தால் இன்னும் ஓரிரு வாரங்களில் மேட்டூர் அணை நிரம்பும். எனவே, டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.