ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி அணையின் நீர்மட்டம் 62 அடியை தாண்டியதும், அணையில் இருந்து மீண்டும் ஒருமுறை பாசனத்திற்காக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அணையில் இருந்து நீர் திறப்பு 1,669 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.37 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 1,900 கன அடியாகவும், நீர் இருப்பு 4,492 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஒரு போக பாசன பகுதிக்கு வைகை அணையில் இருந்து ஆண்டுக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடர்ந்து 45 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து வழக்கமான பாசன அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணை நிரம்பியதாலும், ஒருபோக பாசன பகுதிகளில் மழை இல்லாததாலும் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.