கம்பம் : கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால், மொத்த சந்தைகளில் தினமும் ஒரு டன் வரை தர்பூசணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கம்பத்தில் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனை, பத்திரப் பதிவு அலுவலகம், வடக்கு காவல் நிலையம், வாரச்சந்தை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக தர்பூசணி மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தர்பூசணிகள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வியாபாரிகள் கூறுகையில், ”இங்குள்ள, ஐந்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளில், ஒவ்வொரு கடையிலும், தினமும், ஒரு டன் தர்பூசணிகள் விற்பனை செய்யப்படுகிறது. “மொத்தமாக கிலோ ரூ.20-க்கும், சில்லரையாக ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்,’ என்றனர்.