புதுச்சேரி: புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரச்னைகள் நிலவும் சூழலில், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமாட்டோம் என, தி.மு.க., கருத்து தெரிவித்துள்ளது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரசுக்கு 10 எம்எல்ஏக்களும், பாஜவுக்கு 6 எம்எல்ஏக்களும் உள்ளனர். பாஜகவுக்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜக எம்எல்ஏக்களில் நமச்சிவாயம், சாய்சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்களாகவும், செல்வம் பேரவைத் தலைவராகவும் உள்ளனர். மீதமுள்ள ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கரன், சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகிய 7 பேரும் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்து முதல்வர் ரங்கசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற வலியுறுத்தினர். இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பா.ஜ., ஆதரவை வாபஸ் பெற்றால், 6 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட, தி.மு.க., ஆதரவு அளித்தால் தான், ரங்கசாமி ஆட்சி நீடிக்கும். இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த திமுக மாநில அமைப்பாளர் சிவாவிடம் கேட்டபோது, “எங்கள் கட்சி தலைமை ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விரும்பாது; ஏற்கப்படவில்லை. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை நாங்களும் பயன்படுத்த விரும்பவில்லை.
இனிவரும் காலத்தில் முழுமையான ஆட்சி அமைக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி விவகாரத்தை வேடிக்கை மட்டுமே பார்ப்போம். இந்த அரசின் அநீதிக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும். இது அவர்களின் உள் பிரச்சினை; சொந்த பிரச்சனை. லோக்சபா தேர்தலில், இந்த ஆட்சிக்கான மதிப்பெண்ணை, மக்கள் ஏற்கனவே கொடுத்து விட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, “புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்களின் அதிருப்தி அக்கட்சியின் பிரச்சனை. முதல்வர் ரங்கசாமி மீதான குற்றச்சாட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் உள்ள பிரச்னை. அதனால், ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் சிந்திக்கவில்லை,” என்றார்.