தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் சண்.ராமநாதனை வெற்றி பெற களத்தில் இறங்கி பாடுபடுவோம் என்று உறுதி தெரிவித்தனர்.
தஞ்சாவூா் அண்ணா நூற்றாண்டு அரங்கில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார் .
இந்த கூட்டத்தில் தஞ்சாவூா் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதேபோல் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்று தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.
மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாக்குகள் சேகரிப்பது என்றும், அரசின் வெற்றித்திட்டங்களான 1.15 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.
சுகாதாரம் & உள்கட்டமைப்பு: மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்குதல், ஏற்றுமதி பொருளாதாரம் வளர்ச்சி. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், தமிழ்நாட்டில் திருக்குறள் மற்றும் பிற தமிழ் இலக்கியங்களை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறி வாக்குகள் சேகரித்து வெற்றி பெற செய்வோம் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். இதில் தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ, மக்கள் நீதி மய்யம், திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர் .