தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை மற்றும் திருநெல்வேலியிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனுடன், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை அளவிடப்பட்டது.
மேலும், மதுரை நகரம், சென்னை மீனம்பாக்கம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட், திருச்சி மற்றும் கரூர் பரமத்தி பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவானது. பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெப்பநிலை நிலவியது.
இந்நிலையில், வானிலை மையம் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வெப்பக்காற்றும் மழைக்கும் இடையே நிலவும் இந்த மாற்றம், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.