சென்னை: டாக்டர் காந்தராஜ் மீது போலீஸ் நடவடிக்கை?… நடிகைகளை பற்றி ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசிய டாக்டர் காந்தராஜ் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேரள திரையுலகில் ஹேமா கமிட்டி பெரிய புயலை கிளப்பியது. அங்குள்ள நடிகைகளுக்கு திரைத்துறையில் நேரும் பாலியல் தொந்தரவுகள், அத்துமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டியது. பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்ப மல்லுவுட்டே ஆடி போனது.
பாலியல் தொந்தரவு விவகாரம் அங்கு மட்டும் இல்லை, தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இருக்கிறது என்று நடிகைகள் ராதிகா, விசித்திரா, குஷ்பு உள்ளிட்ட பலரும் பொதுவெளியில் பேசினர். சினிமா நடிகைகள், அவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஊடகங்களிலும் முன்னிலை பிடிக்க, சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக யூடியூப் சேனல்களில் பரபரப்பாக பேசி வரும் டாக்டர் காந்தராஜ், தன் பங்குக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: ‘சினிமாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்று பெயர். அப்படி அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்ளாத நடிகைகளே இல்லை. ஏதோ கேரவன் என்ற ஸ்டைல் வந்த பின்னர் தான் பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை’ என்று கருப்பு வெள்ளை சினிமா வெளியான காலத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் பற்றியும் பட்டியல் வாசித்தார். முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவையும் அவர் விட்டு வைக்கவில்லை.
சினிமா வாய்ப்பு, அட்ஜஸ்ட்மெண்ட் என்று காந்தராஜ் உளறிக்கொட்டிய விவகாரம் வெளியாகி கடும் விமர்சனங்களை எழுப்பியது. ‘ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்’ என்று பலரும் கொந்தளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் சினிமா விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் இருந்தார்.
அவரின் புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் காந்தராஜ் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ‘ஒரு சில நாட்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் கைது நடவடிக்கை பாயும்’ என்று போலீசார் எச்சரித்து சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.