சென்னை: வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை எப்போது வேண்டுமானாலும் வரலாம். வீடு கட்ட விரும்பினால் அதை எளிதில் செயல்படுத்தி விடலாம்.
சிலர் தனி வீடு கட்டுவார்கள். சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவார்கள். சிலர் ஏற்கெனவே இருக்கும் வீட்டின் மீது மாடி எழுப்பத் திட்டமிடுவார்கள்.
வீட்டை நீங்களே கட்டுமானப் பொருட்கள் வாங்கி கட்டிடத் தொழிலாளிகளை வைத்தும் கட்டலாம். இதில் உங்களுக்குச் செலவு கொஞ்சம் குறையும். ஆனால் வேலையாட்களை வைத்து வேலை வாங்குவதற்குத் தனிச் சாமர்த்தியம் வேண்டும். இல்லை என்றால் ஒரு நல்ல கட்டுமான நிறுவனத்தை அணுகி உங்கள் கட்டிடப் பணிகளை அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
இப்படி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் நெருங்கிய நண்பர்களிடமும் உறவுகளிடமும் தீர ஆலோசித்து ஒரு முடிவெடுங்கள். ஏனெனில் பல கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டித் தருவதில் பல சிக்கல்களை உருவாக்கிவிடும்.
அதே நேரத்தில் நேர்மையான சொன்ன படி வாடிக்கையாளருக்கு வீட்டை உருவாக்கித் தரும் நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றை விசாரித்து அறிந்து அவர்களை நாடுங்கள். வீட்டுப் பணிகளை மேற்பார்வையிட தகுந்த ஆட்கள் இல்லாதவர்கள் கட்டுமான நிறுவனத்தில் இந்தப் பணிகளை ஒப்படைத்துவிடுவது நல்லது.
இடையிடையே கட்டிடப் பணியை மேற்பார்வை செய்துகொண்டால் மட்டும் போதும். தகுந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்றால் அவர்களை அழைத்து உங்களது வீட்டைக் காட்டி அதன் மீது எப்படியான வீட்டை அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்துங்கள்.
அவர்கள் உங்கள் வீட்டின் ஆயுள், அதன் பரப்பு, அந்த நிலத்தின் தன்மை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து மாடி வீட்டுக்கான ஆலோசனையையும் மாடி வீட்டுக்கான வரைபடத்தையும் உருவாக்குவார்கள். வரைபடத்துக்கு உரிய அனுமதி பெற்ற பின்னர், வீடு கட்டத் தேவைப்படும் பணத்துக்கான கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.
கட்டிட நிறுவனங்கள் ஒரு சதுர மீட்டருக்கு இவ்வளது தொகை என்று நிர்ணயித்திருப்பார்கள். தரைத் தளத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயித்திருக்கிறார்களோ அதே அளவுக்குத் தான் மாடி வீட்டுக்கும் நிர்ணயிப்பார்கள். தரைத் தளத்துக்கு அஸ்திவாரம் போன்ற பணிகள் உள்ளன ஆனால் மாடி வீட்டுக்கு அது கிடையாதே என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அவர்களைப் பொறுத்தவரை மாடி வீட்டுக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கூறி அதே தொகை ஆகும் என்று கூறுவார்கள். ஆகவே, உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்து கட்டுமானத்துக்கான ஒப்பந்தத் தொகையைப் பேசிக் கொள்ளுங்கள். அத்துடன் எழுத்துபூர்வமான ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளுங்கள். அது தான் இருவருக்குமே நல்லது.