சென்னை: சினிமாவில் மட்டுமே அப்பாக்கள் மனைவியை தாங்குவதும் குழந்தைகளை இளவரசன், இளவரசியாக பார்ப்பதும் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் அப்பாக்களின் பொறுப்பை வெகு சிலரே முழுமையாக புரிந்து கொள்கின்றனர். இந்த பதிவில் நாம் கர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அப்பாக்களே… உங்கள் வயிற்றில் குழந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் மனதில் கரு உண்டாகி இருக்கிறது. புதிய அப்பாக்களுக்கான புத்தகங்களை வாங்கி படியுங்கள். கர்ப்பக்காலம், பிரசவம், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களது மனைவி தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறாரா எனக் கவனியுங்கள்.
குழந்தை பிறப்புக்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, மனைவியிடம் இதைப் பற்றி பேசுங்கள். ப்ரீநேடல் வகுப்புகளை நீங்களும் உங்கள் மனைவியும் இணைந்து சேருங்கள். நீங்களும் மனைவியுடன் சேர்ந்து ஈடுபட்டால் அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும். குழந்தைக்காக என்னென்ன வாங்க வேண்டும் என இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். மனைவியிடம் நிறைய நேரத்தை செலவழியுங்கள்.
உங்களது மனைவிக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆளுமைகள் தென்படும். கர்ப்பக்காலத்தில் இப்படி மல்டிபள் டிஸ்ஆர்டராக மாறுவது இயல்பு. உள்ளுக்குள் பயம் இருக்கும். வெளியில் மகிழ்ச்சியாக பயணித்தாலும் பிரசவம் குறித்த பயம் நிச்சயம் இருக்கும். பிரசவத்துக்கு மனதளவில் தயாராகி இருக்க மாட்டார்கள். சில பெண்கள் நிறைய பயப்படுவார்கள். தோற்றத்தை நினைத்து, தாம்பத்யம் உறவு இல்லாத உங்களின் நிலையை நினைத்து, பாதுகாப்பின்மையால் பயந்து, குண்டாகி இருப்பதால் இனி உங்கள் கண்களுக்கு அழகாக தெரிய மாட்டோமா எனப் பயப்படுவார்கள். குழம்பியும் போவார்கள். உங்கள் மனைவியை புரிந்து, அதிலிருந்து தெளிய வையுங்கள்.
மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். ஆராய்ந்து பாருங்கள். மனைவி தற்காலிகமாக மாறி இருக்கிறாள். இது மனைவியின் நிஜம் அல்ல. ஹார்மோன்களின் ஆட்டம் எனப் புரிந்துகொள்ளுங்கள். தினமும் மனைவியை அன்பாக அரவணைத்துக் கொள்ளுங்கள். மனைவி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். உங்களது தோள்ப்பட்டையை, அவள் சாய்ந்துகொள்ள இடம் அளியுங்கள். அப்படியே உங்கள் மனதிலும் தாராளமான இடம் கொடுக்கலாம். பாசிடிவ் எண்ணங்களை மனைவியின் மனதில் விதைக்கலாம்.