தமிழக மின்வாரியம், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்துள்ளது. இது மின்சாரப் பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 23.55 லட்சம் விவசாய மின்இணைப்புகள் உள்ளன. இவை இலவசமாக வழங்கப்படுவதால், மின்சார பயன்பாட்டைக் கணக்கிட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், சில பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு ஏற்பட்டு, வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடையும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு, அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மின்சார பயன்பாட்டை கண்காணிக்க மீட்டர் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், விவசாய மின்இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் மூலம், எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை துல்லியமாக அறிய முடியும். இதன்மூலம், மின் உற்பத்தி, மின்கொள்முதல் திட்டங்களை சிறப்பாக உருவாக்கலாம். மேலும், அதிக மின்பயன்பாடு உள்ள விவசாய இணைப்புகளுக்கு கூடுதல் மின்சாதனங்கள் நிறுவ முடியும்.
தற்போது சோதனை முயற்சியாக, 1,200 விவசாய மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய, மின்வாரியம் டெண்டர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.