சென்னை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் செல்வமுருகன் (29). இவர், சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பியதா? என பார்க்க மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
அவர் கால் தவறி கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் செல்வ முருகன் என்பவர் 14-வது மாடியில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் எதார்த்தத்தைக் கண்டுபிடியுங்கள். மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி அவரது குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.