சென்னை: வேளச்சேரி இடையே நாளை பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? என்பது குறித்து அதிகாரிகள் அப்டேட் கொடுத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.