சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள காட்டூர், தட்டமஞ்சி ஆகிய இரட்டை ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தும் திட்டம், கடல் நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.62 கோடியே 34 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள 2020 பிப்ரவரி 26-ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணையின் உபரி நீர் காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஏரிகளுக்கு செல்கிறது. இந்த இரண்டு ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி தூர்வாரி நன்னீர் நீர்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டம்.
புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும் போது, அதன் கொள்ளளவு 58.27 மில்லியன் கன அடியில் இருந்து 350 மில்லியன் கன அடியாக உயரும். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணி கடந்த 2020 மே 31-ல் துவங்கியது. 2 ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கரைகள் வரையறுத்து எல்லை கற்கள் நடப்பட்டன. 10 மதகுகள் அகற்றப்பட்டு, புதிதாக 10 மதகுகள் கட்டப்பட்டன.
செல்கள், குழாய்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆரண்யாற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் செறிவூட்டும் கட்டமைப்பு பணிகள், சாலையில் சிறிய பாலம், கடல் நீர் உட்புகுவதை கட்டுப்படுத்த கதவணை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நிறைவடைந்தது.
இதற்கிடையில், ஏரியின் கொள்ளளவை 350 மில்லியன் கன அடியாக உயர்த்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க வேண்டியுள்ளது. இப்பணி முடிந்தால் தான் புதிய ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியும். இப்படி சேமிக்கும் போது பெருநகர சென்னைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். மேலும், 5804.38 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.