சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சாத்தியாரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
இது வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. பின்னர், புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு இடையே வரும் 24-ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய பிறகு, கத்தாரின் பரிந்துரைப்படி அதற்கு ‘டானா’ என பெயரிடப்படும்.