சென்னை: மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் நிதி உதவியாக பெறுகின்றனர். இந்த திட்டத்தின் 19வது தவணை நிதி உதவியாக ரூ. 22,000 கோடி கடந்த 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், விவசாய நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக அரசின் நிதி உதவி வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 17 தவணைகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 19வது தவணை ரூ. 22,000 கோடி மதிப்பில் 9.7 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதற்கான காரணமாக, சில விவசாயிகள் பயன்படுத்தும் முக்கிய வங்கி கணக்குகளில் பணம் வரவில்லை என்றாலும், அவர்களது பெயரில் இருக்கும் மற்ற வங்கி கணக்குகளில் பணம் வரவாகியிருக்கலாம். எனவே, விவசாயிகள் தங்களது கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற வங்கி கணக்குகளிலும் பணம் வரவாகியிருக்கிறதா என சரிபார்க்க வேண்டும்.
ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே பணம் அனுப்பப்படுகிறது. மேலும், ஒரே பெயரில் பல வங்கி கணக்குகள் இருந்தால், ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கில் பணம் வரவாகியிருக்கலாம். இதனால், விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.
ஒருவேளை, எந்த வங்கி கணக்கிலும் பணம் வரவில்லை எனில், https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விவசாயிகள் தங்கள் நிலையைப் பார்க்கலாம். ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால், பயனாளிகள் தங்களது தரவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் கூறுவதுபோல், பொதுவாகவே சில விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பணம் வரவாகி இருக்கிறது. எனவே, விவசாயிகள் தங்களது அனைத்து வங்கி கணக்குகளிலும் பணம் வந்துள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.