சென்னை: சிபிஐ பற்றி பலமுறை கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை உத்தரவுக்குப் பிறகு “நீதி வெல்லும்” என கூறியுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சிபிஐயை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக அழைத்தவர், இப்போது அதே அமைப்பின் விசாரணையை பாராட்டுவது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

கரூரில் நடந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த நாளில் விஜய் இரண்டு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். நேர தாமதம் மற்றும் கூட்ட நிர்வாக குறைபாடு காரணமாக மக்கள் சோர்வடைந்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தவறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவினர் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தையே குற்றம்சாட்டினர்.
சம்பவத்துக்குப் பிறகு பல தரப்பினரும் சிபிஐ விசாரணையை கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது ட்வீட்டில் “நீதி வெல்லும்” என்று குறிப்பிட்டார். ஆனால், இதே விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐயை அரசியல் கைப்பாவையாக கூறியிருந்தார். இதனால் விமர்சகர்கள், “சிபிஐ உங்களுக்கு ஏற்றபடி செயல்பட்டால் நல்லது, இல்லையெனில் மோசமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், தவெகவினர் இந்த உத்தரவை பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை இரட்டை முக அரசியலாக விமர்சிக்கின்றன. கரூர் வழக்கில் பல முக்கிய ஆதாரங்களை சிபிஐ தற்போது திரட்டிவருகிறது என்றும், எதிர்காலத்தில் இது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. “சிபிஐ குற்றவாளியை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று விஜய் கூறியிருப்பது, அவரின் அரசியல் திசையை மாற்றியிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.