ராமநாதபுரம்: இலங்கை சிறையில் வாடும் ராமநாதபுரம் மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஜூலை 1ம் தேதி ராமநாதபுரம்மாவட்டம் பாம்பனில் இருந்து 3 படகுகள் மற்றும் திருவாடானை தாலுகா நம்புதாளையில் இருந்து ஒரு படகு உட்பட 4 படகுகளில் 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகளால் மீன் வளம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். கடந்த காலங்களில் மீனவர்கள் பயன்படுத்திய வலைகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து உடனடியாக விடுவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர்.
தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது வருத்தமளிக்கிறது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.