திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை என்பதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த 2020-ல் 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனை, கடந்த ஏப்ரலில் காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும் மருத்துவ உபகரணங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் இது செயல்படவில்லை.
சீமான் வெளியிட்ட அறிக்கையில், இது வெற்று விளம்பர அரசியலின் ஒரு வடிவம் என்றும், கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் கொடூர செயலாகவும் சாடியுள்ளார். அவர் கூறுகையில், திருத்தணி அல்லது, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையும் தரம் உயர்த்தப்பட்ட பின்னும் தேவையான கட்டமைப்புகள், மருத்துவர்கள் நியமனம் ஆகியவை செய்யப்படவில்லை. இதனால் பயிற்சி மருத்துவர்களை வைத்து மருத்துவ சேவை வழங்கப்படுவது வேதனையான ஒன்றாகும்.

மேலும், விழுப்புரம் மக்கள் மருத்துவ சேவைக்காக ஜிப்மர் போன்ற வெளிமாநில மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை தமிழ்நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்திலும் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில் திமுக அரசு ‘இந்தியா வியக்கும் திராவிட மாடல்’ என பேசுவது வெட்கத்துக்குரியது என்றும், அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் சீமான் கூறினார். ஆகவே, அரசு உடனடியாக திருத்தணி மருத்துவமனைக்குத் தேவையான அனைத்தும் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணியாளர்களை நியமித்து, மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.