சென்னை: வானிலை மாற்றங்களால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் காரைக்காலிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.