ஊட்டி: நீலகிரி மாவட்டம் காடுகள் அதிகம் உள்ள மாவட்டம். காடுகள் அதிகம் உள்ளதால் காட்டு மாடுகள், யானைகள், சிறுத்தைகள், மான்கள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக, இந்த விலங்குகள் காடுகளில் உள்ள உணவை நம்பியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பனிப்பொழிவு இருக்கும். பனிப்பொழிவால் காடுகளில் உள்ள புல்வெளிகள், செடி, கொடிகள், சிறு செடிகள் காய்ந்து கருமை நிறமாகிறது.
பனிப்பொழிவு முதல் மே மாதம் வரை போதிய மழையும் இல்லை. இதனால் வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், குளங்கள், குட்டைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு உள்ள இடங்களுக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வரை மழை நீடித்தது. இதனால் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. பனியின் கடுமையால் தேயிலை மட்டுமின்றி வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகளும் கருகின.
மேலும், பனி மூட்டத்தால் மழை பெய்யாததால், முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி, கூடலூர் கோட்டங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதிகளில் உள்ள புற்கள், செடிகள், மரங்கள் காய்ந்துள்ளன. இதனால் இந்த வனப்பகுதிகளில் வன விலங்குகள் போதிய உணவு கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வரத் தொடங்கியுள்ளன. நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பசுமை நீர் நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன. புற்கள், செடிகள் காய்ந்து கிடப்பதால், எந்நேரமும் காட்டுத் தீ பரவும் சூழல் உள்ளது. இதனால் காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.