சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. ஆனால், பல மாவட்டங்கள் மழையின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. தொடர் மழை விடுமுறையால், பாடத்திட்டத்தை முடிக்க போதிய அவகாசம் இல்லை. எனவே, தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். துறை செயலர் சோ. மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.