தமிழகத்தில் ‘மகளிர் உரிமைத் தொகை’ பெற தகுதியுள்ள, ஆனால் இதுவரை அதைப் பெறாத பெண்களுக்கு, இன்னும் 2 மாதங்களில் ரூ.1000 வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதற்கான சிறப்பு முகாம் ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த முகாம்களின் வாயிலாக விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க முடியும். அவர்கள் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதிபட தெரிவித்துள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ எனப்படும் முகாம் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் 360 இடங்களில் இந்த முகாம்கள் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திட்டம் மக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்க உதவுவதோடு, அரசு நலத்திட்டங்களில் சேராத தகுதியுள்ள நபர்களை அடையாளம் காணவும் உதவுகிறது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
திமுக பாக் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, “மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திட்டமாக மாறியுள்ளது. இதுவரை 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுவருகின்றனர். மேலும் 8 லட்சம் மாணவிகள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் உயர் கல்வி பயின்றுள்ளனர். இந்த அனைத்து திட்டங்களும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன,” என்றார்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, லோக்சபா தொகுதி மறு சீரமைப்பு மற்றும் நிதி உரிமை குறைப்புகள் போன்ற நடவடிக்கைகள் தமிழகத்தின் விரோதமாக உள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார். “திமுக அரசு தொலைநோக்குப் பார்வையுடன், மக்களுக்கு நேரடியாக பயன்படும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளதால், எதிர்க்கட்சிகள் பதறியுள்ளன,” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.