மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் திடீரென நடமாடி வருகின்றன. இங்கு படையப்பா என்ற ஆண் யானை, ஒரே தந்தத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை கொம்பு யானை அடிக்கடி கிராமத்திற்குள் வந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
கடைகளை உடைத்து நாசம் செய்து பொருட்களை சாப்பிடுகிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இந்நிலையில், மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் சாலையில், ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், நேற்று முன்தினம், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கொம்பு யானை வந்தது.
இதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தரம் பிரித்து சாக்குகளில் கட்டப்பட்டிருந்த குப்பைகளை ஒற்றை கொம்பு யானை தூக்கி வீசியது. இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.