சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 7 முதல் 11 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியின் சில பகுதிகளிலும், இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் குளிர் முதல் கடுமையான குளிர் நிலை காணப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீர்-லடாக்-கில்கிட்-பால்டிஸ்தான்-முசாபராபாத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குளிர் அலை நிலைகள் காணப்படுகின்றன. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது.
தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 01-01-2025 முதல் 05-01-2025 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலையில் லேசான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காலையில் லேசான மூடுபனி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸாகவும் இருக்கும்.