சென்னை: நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாகை மாவட்டம் கோடியக்கரையில் தலா 15 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் காக்கச்சியில் 14 செ.மீ., நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் திருக்குவளையில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேதாரண்யம், மாஞ்சோலை, ராமநாதபுரத்தில் தலா 10 செ.மீ., தலைஞாயிறு பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிக கனமழையும், 8 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அனைத்து படகுகளும் கரை திரும்ப வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.