சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC, MBC, TNC), பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் மற்றும் தகுதியுடைய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக பிரதமரின் உதவித்தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025-26-ம் ஆண்டுக்கான தேசிய உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் பயனடைய, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உள்ள புதுப்பித்தல் விண்ணப்ப இணைப்பிற்குச் சென்று தங்கள் OTR எண்ணைப் பதிவு செய்து 2025-26-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டும் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதளத்தில் தங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட்டு புதிய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மேற்கண்ட இணையதளத்தைப் பார்வையிடலாம்.
உதவி பெற, மாணவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பத்தைச் சரிபார்க்க வேண்டும்.