சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு:-
நமது நாட்டில் கேட் அல்லது சிஇடி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2024-25) பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேரும் முதுநிலை மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,400 உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, விண்ணப்பிக்கும் போது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில், பகுதி நேர, தொலைதூர அடிப்படையில் முதுகலை படிப்பை மேற்கொள்பவர்கள் உதவித்தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற இணையதளத்தின் மூலம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.