சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்திலும் பொதுமக்கள் பயணிக்க ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) 2-வது ஆணையக் கூட்டம் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை செயலகத்தில் நடைபெற்றது. இதில், இந்தியாவிலேயே முதல்முறையாக, iOS மற்றும் Android தளங்களில் இயங்கக்கூடிய, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் ‘சென்னை ஒன்’ மொபைல் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த செயலி பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களை ஒரே QR டிக்கெட் மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும், ஒரே பயணப் பதிவு மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணிக்கவும் முடியும்.
இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பொது போக்குவரத்து சேவைகளில் ஒரு முக்கியமான முயற்சியாகும். மக்கள் எளிதாக கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.