சென்னை: இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்காக Meta AI எனப்படும் AI சாட்போட்டை Meta நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் நேரமின்மை காரணமாக ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அப்ளிகேஷன்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை சமூக வலைதளங்களில் கொண்டு வருவதன் மூலம், அவற்றைக் கொண்டே பெரும்பாலான விஷயங்களை செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பதிவில் Meta AI கொண்டுவரப்பட்டதால் என்ன பலன்கள்? இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
Meta AI சாட்போட் OpenAI-இன் “ChatGPT”, Microsoft-இன் “Copilot” மற்றும் Google-இன் “Gemini” போன்றவற்றுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் Meta AI ஏற்கனவே கிடைக்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் Meta AI அறிமுகப்படுத்தப்பட்டதால், பயனர்கள் பின்வரும் வழிகளில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த ஒரு கேள்வியை வேண்டுமானாலும் Meta AI-யிடம் கேட்கலாம். உதாரணமாக, வார இறுதியில் சுற்றுலா செல்ல திட்டமிடுதல், நேர்முகத் தேர்வுக்கு தயாராகுதல் மற்றும் உங்களுக்கான எந்த ஒரு கேள்விக்கும் Meta AI-யிடம் யோசனைகளைப் பெற முடியும்.
(/imagine) என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி பின்னர் உங்கள் விருப்பத்தை என்டர் செய்வதன் மூலம் Meta AI கொண்டு படங்களை உருவாக்கலாம். உதாரணமாக, “/imagine கடற்கரை” என்று டைப் செய்தால், கடற்கரை படத்தை உருவாக்கித் தரும். இதுபோல் உங்கள் கற்பனைக்கு தகுந்தவாறு படங்களை உருவாக்கலாம். அவற்றை பிறருக்கு ஃபார்வேர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதுபோன்று AI மூலம் உருவாக்கப்படும் படங்களின் மூலையில் “With AI Imagined” என்ற வாட்டர் மார்க் போதிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
எலான் மஸ்க், டெய்லர் ஸ்விஃப்ட் அல்லது நரேந்திர மோடி போன்ற பிரபலமான ஆளுமைகளின் படங்களை இது உருவாக்காது என்று கூறப்படுகிறது. குரூப் மெசேஜ்களில் AI-யிடம் கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து படங்களை உருவாக்க சொல்லி விளையாடி மகிழலாம்.
உங்கள் ஃபீடில் (feed) உள்ள ஒரு படம் உங்களுக்கு பிடித்தால், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை Meta AI-யிடம் கேட்கலாம். உதாரணமாக, உங்கள் நண்பர் ஒரு சுற்றுலா தல புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தால், “அந்த சுற்றுலா தலத்தைப் பார்க்க எந்த நேரம் சிறந்தது” என்று Meta AI-ஐக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தேடலை அடிப்படையாகக் கொண்டு ரீல்ஸ் (Reels) பரிந்துரைகளை Meta AI வழங்கும். எதைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்காமலேயே, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ரீல்ஸ் பரிந்துரைகளைப் பெறலாம். மெட்டா நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகம், சமூக வலைதளங்களில் நம் அன்றாட பழக்கவழக்கங்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.