புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் 22% சுங்க வரி (20% அடிப்படை மற்றும் 2% கூடுதல் கட்டணம்) விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனையடுத்து இறக்குமதி போன்களுக்கான மொத்த சுங்க வரி இப்போது 16.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. ப்ரோ (Pro) அல்லாத அடிப்படை மாடல்களின் விலை கிட்டத்தட்ட ரூ.300 குறைக்கப்பட்டாலும், உயர்நிலை ப்ரோ மாடல்களின் விலை ரூ.6,000 வரை குறைகிறது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபோன்களின் புதிய விலைப் பட்டியலை ஆப்பிள் தனது இணையதளத்தில் அப்டேட் செய்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ரூ.6,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளன.
ஐபோன் SE ரூ.2,300 விலை குறைக்கப்பட்டு, தற்போது ரூ.47,600க்கு விற்பனையாகிறது. முன்னதாக இந்த போன் ரூ.49,900-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்கள் முறையே ரூ.59,600 மற்றும் ரூ.69,600 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.