திண்டுக்கல்லை சேர்ந்த மகரிஷியின் பயணம், ஒரு சாதாரண இளைஞனின் கதை போல் ஆரம்பித்து, புதுமைமிக்க தொழில்நுட்ப வழிக் கல்வி புரட்சி வரை விரிந்துள்ளது. வங்கி ஊழியராக இருந்த தந்தையின் ஆசையை வென்று, பிளஸ் 2 முடித்ததும் ஐஐடியில் இன்ஜினியரிங் டிசைன் படிப்பில் சேர்ந்தார். அங்கு நவீன் எனும் நண்பனுடன் சேர்ந்து பெற்ற அனுபவம், அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

படிப்பு முடித்ததும் மருந்து டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், ஒரு சாப்ட்வேர் டெவலப்பராக தொடங்கி பிசினஸ் மேனேஜ்மென்ட் வரை பலதரப்பட்ட பொறுப்புகளை ஏற்க நேர்ந்தது. அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் விற்பனையை எட்டியது. அதன் உரிமையாளர் அனிருத், அவரது முதலாளியாக இருந்தாலும், நண்பராக செயல்பட்டது, அவர்களின் புதிய முயற்சிக்கான அடித்தளமாக அமைந்தது.
மகரிஷிக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள படித்த பருவத்தில் ஏற்பட்ட கஷ்டம் தான் ‘சூப்பர்நோவா’ என்ற நிறுவனத்தின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம், “நோவா” என்ற ஒரு வாட்ஸ்ஆப் ஏஐ டீச்சரை உருவாக்கியிருக்கிறார்கள். இது பக்கத்தில் உட்காரும் ஆசிரியரைப் போலவே, ஒரு மாணவனுக்கு ஆங்கிலம் கற்றுத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நோவா, ஹிந்தி, கன்னடம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலேயே ஆங்கிலம் கற்றுத் தருகிறது. முதல் வகுப்பு மாணவர்களிலிருந்து முதியவர்கள்வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய இந்த பயன்பாட்டை, அரசு பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல விருப்பம் உள்ளனர். அடுத்த கட்டமாக கணிதம் மற்றும் அறிவியலும் சேர்க்கும் திட்டத்தில் இருக்கின்றனர். “ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்” என்ற கனவை நோக்கி அவர் நடக்கிறார்.