இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி துறையில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதி சாதனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக கருதப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி இந்தியாவில் வலுவாக ஆரம்பித்த பிறகு, ஏற்றுமதி அளவு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக 11.7 பில்லியன் டாலர் மதிப்பில் மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடுகையில், இந்த வளர்ச்சி 55 சதவீதம் அதிகம் என்பது பெருமைக்குரிய சாதனையாகும்.
அமெரிக்கா தான் இந்தியாவில் உற்பத்தியாகும் மொபைல் போன்களின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த சாதனை, இந்தியாவை உலகளவில் மொபைல் உற்பத்தி மையமாக நிலைநிறுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இத்துறை மேலும் வளர்ச்சி அடைந்து, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.