புதுடில்லி: உலகம் முழுவதும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய 17 ப்ரோ வரிசை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட மாடல்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் இந்த வரிசை, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா, வேகமான A19 ப்ரோ சிப் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய வரிசையில் மொத்தம் நான்கு மாடல்கள் உள்ளன – ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் புதிதாக அறிமுகமான ஐபோன் 17 ஏர். இதில் ஐபோன் ஏர் மாடல், இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஐபோன்களிலும் மிகவும் மெலிதானதாகும். இது கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் புதிய 3-நானோமீட்டர் A19 ப்ரோ மொபைல் செயலியால் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இயக்கப்படுகின்றன. மற்ற மாடலான ஐபோன் 17 இல் A19 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வண்ணங்களில் காஸ்மிக் ஆரஞ்சு, அடர் நீலம் மற்றும் வெள்ளி (சில்வர்) ஆகிய மூன்றிலும் இந்த மாடல்கள் கிடைக்கின்றன.
ஐபோன் 17 ப்ரோவின் திரை 6.3 இன்ச் அளவில் இருக்கும் போது, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் திரை அளவுடன் வருகிறது. இந்தியாவில், இந்த ப்ரோ மாடல்களின் விலை முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியுள்ளது.