செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி, இந்தியாவின் ஐடி துறைக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. உலகளவில் நடைபெறும் பொருளாதார நெருக்கடியும், தன்னியக்க முறைகளின் வளர்ச்சியும் காரணமாக, ஐடி நிறுவனங்களில் பணிநீக்கம் அதிகரித்துள்ளன.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், தற்போது இந்தியாவின் டெக் துறையில் சுமார் 80 லட்சம் பேர் பணிபுரிந்துவருவதாகவும், இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் அழியும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், புதிய தொழில்நுட்பத் திறன்களைப் பெறும் நிபுணர்களுக்கு 40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம், “நாம் தொழில்நுட்ப திசைமாற்றத்தை ஏற்காமல் இருந்தால், வேலை இழப்புகள் மிக வேகமாக ஏற்படும். அதனால் ‘தேசிய AI திறன் மிஷன்’ மூலம் இளைஞர்களை புதிதாக பயிற்றுவிக்க அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் தேவஜானி கோஷ், “சரியான திட்டமிடல் செய்தால், இந்தியா 2035க்குள் உலகின் செயற்கை நுண்ணறிவு மையமாக மாறும்” என கூறியுள்ளார். தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்திய இளைஞர்கள் புதிதாக தங்கள் திறன்களை மேம்படுத்துவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.