புதுடில்லி: இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த செமிகண்டக்டர் பொருட்கள் தயாரிப்பாளரான மெர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், டில்லியில் நடைபெற்ற செமிகான் இந்தியா மாநாட்டின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. டாடா எலக்ட்ரானிக்ஸ் தற்போது குஜராத்தின் தோலேரா பகுதியில் 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது.
உற்பத்திக்கு தேவையான உயர் தர மின்னணு பொருட்கள், நவீன எரிவாயு மற்றும் ரசாயன விநியோக முறைகளை மெர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறும் திட்டம் உள்ளது. இது, இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி துறையின் தன்னிறைவு நோக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்ளூரில் சேமிப்பு கிடங்கு அமைப்பது, மூலப்பொருள் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவது, திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவது மற்றும் தொழில் தரநிலைகளை உறுதிப்படுத்துவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறைக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.