துபாய் மற்றும் மும்பையை இணைக்கும் நீருக்கடியில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் தற்போது ஆய்வுகளுடன் முன்னேறி வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் பணியக லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் அப்துல்லா அல் ஷெஹி தெரிவித்தார்.
கலீஜ் டைம்ஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்துல்லா அல் ஷெஹி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த லட்சியத் திட்டம் குறித்து முன்னேற்றங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு இன்னும் நடைபெறுகிறது. இருப்பினும், இந்த முயற்சி நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அல் ஷெஹி உறுதிப்படுத்தினார்.
இந்தத் திட்டம் குறித்து பல்வேறு துறைகளிடமிருந்து ஒப்புதல் பெறும்வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ நிதி உறுதிப்பாட்டையும் அளிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார். எனவே, திட்டத்தின் தொடக்கத்திற்கான தெளிவான காலக்கெடு இப்போது இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் சுமார் நான்கு மணிநேரம் ஆகுகிறது. ஆனால் கடலுக்கடியில் இயக்கப்படும் ரயில் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனால், பயண நேரம் வெறும் இரண்டு மணிநேரமாகக் குறையும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, மத்திய இந்தியாவில் உள்ள நர்மதா நதியிலிருந்து ஐக்கிய அரபு எமீரகத்திற்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டம். மேலும், இந்த ரயில் பாதை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஓமன் உள்ளிட்ட பல நாடுகளை இணைக்கும். இது ஒரு சர்வதேசப் போக்குவரத்து வழித்தடமாகவும் இருக்கும்.
அரபிக் கடலின் மேற்பரப்பிலிருந்து 20-30 மீட்டர் கீழே கட்டப்பட்ட கான்கிரீட் சுரங்கப்பாதைகள் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இத்தகைய மகத்தான திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
இத்திட்டம் தவிர, காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்காக அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை ஐக்கிய அரபு எமிரேகத்திற்கு அனுப்பும் திட்டம் போன்ற புதுமையான யோசனைகளையும் அப்துல்லா அல் ஷெஹி தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.