சென்னை: வால்வோ கார் இந்தியா நிறுவனம் EX30 மாடல் எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கூறியதாவது:-
“பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வால்வோவின் புதிய தயாரிப்பு EX30 மாடல் எலக்ட்ரிக் கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் 19-ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ. 39,99,000 தள்ளுபடி விலையில் வழங்கப்படும். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து டெலிவரி தொடங்கும்.

வால்வோவின் மூன்றாவது EV மாடலான EX30, பெங்களூருவின் ஹோசகோட்டேயில் உள்ள அதன் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு EX30 காரும் 11-kW சார்ஜருடன் இலவசப் பொருளாக வருகிறது. இது புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சமரசமற்ற பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
EX30 மோதல் எச்சரிக்கை அமைப்புகள், 5 கேமராக்கள், 5 ரேடார்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்க 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இது 3 வருட முழு உத்தரவாதம், 3 வருட வால்வோ சேவை தொகுப்பு மற்றும் 8 வருட பேட்டரி உத்தரவாதம் போன்ற பிற நன்மைகளுடன் வருகிறது என்று ஜோதி மல்ஹோத்ரா கூறினார்.