வாஷிங்டன் நகரில், எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2022ஆம் ஆண்டு, உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு, அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். அதன் பின்னர், லிண்டாவை சி.இ.ஓ. பதவிக்கு நியமித்தார்.

இரண்டு ஆண்டுகளாக தனது பதவியில் இருந்த லிண்டா, எக்ஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் தனது நோக்கங்களைப் பகிர்ந்தபோது, அது ஒரு சாதாரண வேலை அல்ல, வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்பு என உணர்ந்ததாக அவர் கூறினார்.
தான் மேற்கொண்ட பணிகளாக, கருத்து சுதந்திரம், பயனர் பாதுகாப்பு, விளம்பரதாரர்களின் நம்பிக்கை மீட்டெடுத்தல், மற்றும் கம்யூனிட்டி நோட்ஸ் திட்டங்களை குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் ஏ.ஐ. வழியாக நிறுவனம் புதிய கட்டத்தை நோக்கி செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாற்றம் தொழில்துறையிலும், சமூக ஊடக உலகிலும் பெரும் பேசுபொருளாகி உள்ளது. லிண்டாவின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.