கேரளா: ஓய்வுக்கு பெயர் பெற்ற ஆலப்புழா…கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று அழைக்கப்படும் ஆலப்புழா ஓய்வுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகும்.
ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும். ஆலப்புழாவில் ஓடைகள் மூலமாக இயக்கப்படும் நீர்வழிப்போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வது உங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு விடுமுறையை திட்டமிட்டு ஆலப்புழாவிற்கு சென்று, உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும்.
பளபளப்பான கடற்கரைகள், சாந்தம் தவழும் ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன. வருடாவருடம் ஆலப்புழாவில் நேரு கோப்பை படகுப் போட்டி விமரிசையாக நடத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல படகுச் சங்கங்கள் இதில் கலந்து கொள்கின்றன. வெற்றிக்கோப்பை வழங்கும் பழக்கம் ஒருமுறை இந்த போட்டியை ரசித்த ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது 60 வருடத்தை எட்டிவிட்ட இந்த படகுப்போட்டி இன்றும் அதே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று இந்த படகுப்போட்டி நடத்தப்படுகிறது. மற்ற நாட்களில் நிசப்தம் நிலவும் ஆலப்புழா நீர்த்தேக்கமானது இப்போட்டியின்போது பரபரப்பாக மாறுவதுடன் நகரமும் ஒரு திருவிழாக்கோலத்தை பூண்டுவிடும். ஜுன், ஜுலை மழைக்காலம் முடிந்தபின்னர் நடத்தப்படும் இந்த படகுப்போட்டி நிகழ்ச்சியின்போது ஆலப்புழா சுற்றுலாத்தலத்துக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாகும்.