வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பரவலாகப் பெய்ததுடன், உதகை, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். உதகையில் படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலம் நீரில் மூழ்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.பில்லூர் அணை நிரம்பி உபநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாயாற்றை கடக்க மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதியால் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் இன்றும் மூடப்பட்டுள்ளன.
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் மரக்காடுகள், 9வது மைல், கேர்னில் ஆகியவை தற்போது பொதுமக்கள் அணுக முடியாத நிலையில் உள்ளன.மண்டலங்களில் அதிக மழை மற்றும் இயற்கை பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.